திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.6 திருக்கழிப்பாலை
பண் - காந்தாரம்
வனபவள வாய்திறந்து வானவர்க்குந்
    தானவனே என்கின் றாளாற்
சினபவளத் திண்டோள்மேற் சேர்ந்திலங்கு
    வெண்ணீற்றன் என்கின் றாளால்
அனபவள மேகலையோ டப்பாலைக்
    கப்பாலான் என்கின் றாளாற்
கனபவளஞ் சிந்துங் கழிப்பாலைச்
    சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
1
வண்டுலவு கொன்றை வளர்புன்
    சடையானே என்கின் றாளால்
விண்டலர்ந்து நாறுவதோர் வெள்ளெருக்க
    நாண்மலருண் டென்கின் றாளால்
உண்டயலே தோன்றுவதோர் உத்தரியப்
    பட்டுடையன் என்கின் றாளாற்
கண்டயலே தோன்றுங் கழிப்பாலைச்
    சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
2
பிறந்திளைய திங்களெம் பெம்மான்
    முடிமேல தென்கின் றாளால்
நிறங்கிளருங் குங்குமத்தின் மேனி
    யவன்நிறமே யென்கின் றாளால்
மறங்கிளர்வேற் கண்ணாள் மணிசேர்
    மிடற்றவனே யென்கின் றாளாற்
கறங்கோத மல்குங் கழிப்பாலைச்
    சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
3
இரும்பார்ந்த சூலத்தன் ஏந்தியோர்
    வெண்மழுவன் என்கின் றாளாற்
சுரும்பார்ந்த மலர்க்கொன்றைச் சுண்ணவெண்
    ணீற்றவனே என்கின் றாளாற்
பெரும்பால னாகியோர் பிஞ்ஞக
    வேடத்தன் என்கின் றாளாற்
கரும்பானல் பூக்குங் கழிப்பாலைச்
    சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
4
பழியிலான் புகழுடையான் பால்நீற்றான்
    ஆனேற்றன் என்கின் றாளால்
விழியுலாம் பெருந்தடங்கண் இரண்டல்ல
    மூன்றுளவே என்கின் றாளாற்
சுரியுலாம் வருகங்கை தோய்ந்த
    சடையவனே என்கின் றாளாற்
கழியுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச்
    சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
5
பண்ணார்ந்த வீணை பயின்ற
    விரலவனே என்கின் றாளால்
எண்ணார் புரமெரித்த எந்தை
    பெருமானே என்கின் றாளாற்
பண்ணார் முழவதிரப் பாடலோ
    டாடலனே என்கின் றாளாற்
கண்ணார் பூஞ்சோலைக் கழிப்பாலைச்
    சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
6
முதிருஞ் சடைமுடிமேல் முழ்கும்
    இளநாகம் என்கின் றாளால்
அதுகண் டதனருகே தோன்றும்
    இளமதியம் என்கின் றாளாற்
சதுர்வெண் பளிக்குக் குழைகாதின்
    மின்னிடுமே என்கின் றாளாற்
கதிர்முத்தஞ் சிந்துங் கழிப்பாலைச்
    சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
7
ஓரோத மோதி உலகம்
    பலிதிரிவான் என்கின் றாளால்
நீரோத மேற நிமிர்புன்
    சடையானே என்கின் றாளாற்
பாலோத மேனிப் பவளம்
    அவனிறமே என்கின் றாளாற்
காரோத மல்குங் கழிப்பாலைச்
    சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
8
வானுலாந் திங்கள் வளர்புன்
    சடையானே என்கின் றாளால்
ஊனுலாம் வெண்டலைகொண் டூரூர்
    பலிதிரிவான் என்கின் றாளாற்
தேனுலாங் கோதை திளைக்குந்
    திருமார்பன் என்கின் றாளாற்
கானுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச்
    சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
9
அடர்ப்பரிய இராவணனை அருவரைக்கீழ்
    அடர்த்தவனே என்கின் றாளாற்
சுடர்ப்பெரிய திருமேனிச் சுண்ணவெண்
    ணீற்றவனே என்கின் றாளால்
மடற்பெரிய ஆலின்கீழ் அறம்நால்வர்க்
    கன்றுரைத்தான் என்கின் றாளாற்
கடற்கருவி சூழ்ந்த கழிப்பாலைச்
    சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.30 திருக்கழிப்பாலை - திருநேரிசை
நங்கையைப் பாகம் வைத்தார்
    ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார்
    ஆனையின் உரிவை வைத்தார்
தங்கையின் யாழும் வைத்தார்
    தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார்
    கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
1
விண்ணினை விரும்ப வைத்தார்
    வேள்வியை வேட்க வைத்தார்
பண்ணினைப் பாட வைத்தார்
    பத்தர்கள் பயில வைத்தார்
மண்ணினைத் தாவ நீண்ட
    மாலினுக் கருளும் வைத்தார்
கண்ணினை நெற்றி வைத்தார்
    கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
2
வாமனை வணங்க வைத்தார்
    வாயினை வாழ்த்த வைத்தார்
சோமனைச் சடைமேல் வைத்தார்
    சோதியுட் சோதி வைத்தார்
ஆமனை யாட வைத்தார்
    அன்பெனும் பாசம் வைத்தார்
காமனைக் காய்ந்த கண்ணார்
    கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
3
அரியன அங்கம் வேதம்
    அந்தணர்க் கருளும் வைத்தார்
பெரியன புரங்கள் மூன்றும்
    பேரழ லுண்ண வைத்தார்
பரியதீ வண்ண ராகிப்
    பவளம்போல் நிறத்தை வைத்தார்
கரியதோர் கண்டம் வைத்தார்
    கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
4
கூரிருள் கிழிய நின்ற
    கொடுமழுக் கையில் வைத்தார்
பேரிருள் கழிய மல்கு
    பிறைபுனற் சடையுள் வைத்தார்
ஆரிருள் அண்டம் வைத்தார்
    அறுவகைச் சமயம் வைத்தார்
காரிருள் கண்டம் வைத்தார்
    கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
5
உட்டங்கு சிந்தை வைத்தார்
    உள்குவார்க் குள்ளம் வைத்தார்
விட்டங்கு வேள்வி வைத்தார்
    வெந்துயர் தீர வைத்தார்
நட்டங்கு நடமும் வைத்தார்
    ஞானமு நவில வைத்தார்
கட்டங்கந் தோண்மேல் வைத்தார்
    கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
6
ஊனப்பே ரொழிய வைத்தார்
    ஓதியே உணர வைத்தார்
ஞானப்பேர் நவில வைத்தார்
    ஞானமு நடுவும் வைத்தார்
வானப்பே ராறும் வைத்தார்
    வைகுந்தற் காழி வைத்தார்
கானப்பேர் காதல் வைத்தார்
    கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
7
கொங்கினும் அரும்பு வைத்தார்
    கூற்றங்கள் கெடுக்க வைத்தார்
சங்கினுள் முத்தம் வைத்தார்
    சாம்பலும் பூச வைத்தார்
அங்கமும் வேதம் வைத்தார்
    ஆலமும் உண்டு வைத்தார்
கங்குலம் பகலும் வைத்தார்
    கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
8
சதுர்முகன் தானும் மாலுந்
    தம்மிலே இகலக் கண்டு
எதிர்முக மின்றி நின்ற
    எரியுரு வதனை வைத்தார்
பிதிர்முகன் காலன் றன்னைக்
    கால்தனிற் பிதிர வைத்தார்
கதிர்முகஞ் சடையில் வைத்தார்
    கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
9
மாலினாள் நங்கை அஞ்ச
    மதிலிலங் கைக்கு மன்னன்
வேலினான் வெகுண் டெடுக்கக்
    காண்டலும் வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு
    நொடிப்பதோ ரளவில் வீழக்
காலினால் ஊன்றி யிட்டார்
    கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.107 திருக்கழிப்பாலை - திருவிருத்தம்
நெய்தற் குருகுதன் பிள்ளையென்
    றெண்ணி நெருங்கிச்சென்று
கைதை மடற்புல்கு தென்கழிப்
    பாலை யதனுறைவாய்
பைதற் பிறையொடு பாம்புடன்
    வைத்த பரிசறியோம்
எய்தப் பெறின்இரங் காதுகண்
    டாய்நம் மிறையவனே.
1
பருமா மணியும் பவளமுத்
    தும்பரந் துந்திவரை
பொருமால் கரைமேற் றிரைகொணர்ந்
    தெற்றப் பொலிந்திலங்குங்
கருமா மிடறுடைக் கண்டனெம்
    மான்கழிப் பாலையெந்தை
பெருமா னவனென்னை யாளுடை
    யானிப் பெருநிலத்தே.
2
நாட்பட் டிருந்தின்பம் எய்தலுற்
    றிங்கு நமன்தமராற்
கோட்பட் டொழிவதன் முந்துற
    வேகுளி ரார்தடத்துத்
தாட்பட்ட தாமரைப் பொய்கையந்
    தண்கழிப் பாலையண்ணற்
காட்பட் டொழிந்தவன் றேவல்ல
    மாயிவ் வகலிடத்தே.
3
இப்பதிகத்தில் நான்காம் செய்யுள் சிதைந்து போயிற்று.
4
இப்பதிகத்தில் ஐந்தாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
5
இப்பதிகத்தில் ஆறாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
இப்பதிகத்தில் எட்டாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
9
இப்பதிகத்தில் பத்தாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com